மோடி தலைமையிலான அரசில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மோடி அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவளிக்கவே சந்திரபாபு நாயுடு விரும்புவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியில் பங்கேற்பது மற்றும் பாலயோகி போன்று சபாநாயகர் பதவிபெறுவது என்பது தெலுங்கு தேசம் கட்சியில் இரண்டு அதிகார மையங்களுக்கு வழி வகுக்கும் என்றும் அதனால் கட்சியை உடைக்கும் வேலையில் கைதேர்ந்த பாஜக-வுக்கு சாதகமாகிவிடும் என்று சந்திரபாபு உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுவதாகக் கூறப்படுகிறது.
அதனால் வெளியில் இருந்து ஆதரவளிக்கவே நாயுடு விரும்புவதாகவும் பாஜக வலியுறுத்தலின் பேரிலேயே அமைச்சர் பதவிக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கை உரிய ஒரிருவருக்கு மட்டுமே அமைச்சர் அல்லது இணையமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்க முடிவெடுத்துள்ள நாயுடு இதன் மூலம் மாநில உரிமைகளுக்காக பாஜக அரசுக்கு அழுத்தம் தர முடியும் என்று நம்புவதாக் கூறப்படுகிறது.
மேலும் முதல்வராக பதவாயேற்க உள்ள சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் ஜெகன்மோகன் ரெட்டியால் கைவிடப்பட்ட மாநில வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளதையடுத்து மத்திய அரசுடன் இணக்கமாகவும் அதேவேளையில் சூழலுக்கு தகுந்தவாறும் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.