ஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் ஒரே வகை புரோட்டீன்கள் ஆகும். இது மட்டுமின்றி, T-செல்கள் என்பது நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் மற்றொரு வகை நோயெதிர்ப்பு செல்கள், குறிப்பாக செல்களுக்கு உள்ளாக வாழும் நுண்ணுயிரி அல்லது நோய் கிருமிகளுக்கு (வைரஸ்கள் போன்றவை) எதிராக போராடும் திறன் கொண்டவை.
COVID-19- ஏற்படுத்தும் வைரஸ் புதியது மற்றும் தனித்துவமானது என்பதால், நமக்கு அதனைப் பற்றிய தகவல்கள் அதிகமாக அறியப்படவில்லை. எனவே, ஒரு முறை நோயைப் பெறுவது ஒரு நோயாளியை மறுமுறை நோய் தாக்குதலில் இருந்து காக்குமா என விஞ்ஞானிகள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். ஏனெனில் பெரும்பாலான கிருமித் தொற்றுகளில் அதுவே நிகழ்கிறது.
இரண்டாம் சுற்று நோய்த்தொற்றின் சாத்தியத்தைச் சரிபார்க்கவும், நோய் பரவுவதைக் கண்டறியவும் மக்களிடையே COVID-19-க்கு என குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் இருப்பைக் கண்டறிய பரவலான ஆன்டிபாடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, COVID-19-ன் 80 சதவிகிதம் லேசான அல்லது அறிகுறியற்றவை என தெரிய வந்துள்ளது. மேலும், உறுதியான நோயாளிகள் அல்லது, நிறைய பேர் இந்த நோயைப் பெற்றிருக்கலாம் மற்றும் அதி உணராமலேயே குணமடைந்திருக்கும் சாத்தியம் உள்ளது.
ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மற்றும் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு, ஆன்டிபாடி சோதனையால் சொல்லக்கூடிய அளவையும் விட அதிக அளவில் COVID-19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பொது மக்களிடையே பரவலாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளது. எனவே நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறிவதற்கான நமது யுக்திகளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆய்வு முடிவுகள் அச்சுக்கு செல்லும் முந்தைய நிலையில் உள்ளதால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
இது வரையிலான ஆதாரங்கள்
பொதுவாக, ஒரு நபருக்கு கிருமி தொற்று ஏற்பட்டால், அக்கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் முதன்மையாக ஒரு நோயெதிர்ப்பு புரோட்டீன்கள் உருவாகும். இந்த நோயெதிர்ப்பு புரோட்டீன்கள் ஆன்டிபாடிகள் எனப்படுகிறது. நோயிலிருந்து மீண்ட பிறகு, இந்த ஆன்டிபாடிகளில் சில அதே நோய்க்கிருமி தொற்று இரண்டாம் முறை ஏற்பட்டால், அடையாளம் கண்டு விரைவாக அகற்றும் செயல்முறையை உறுதிப்படுத்தி தொடரும் வகையில் நம் உடலில் தங்கியிருக்கின்றன. சரியாக சொல்வதானால், நமக்கு ஏற்பட்ட நோய் கிருமியின் கட்டமைப்புகள் பற்றிய தகவல்கள் நமது நோயெதிர்ப்பு செல்களில் நினைவக செல்களாக சேமிக்கப்படுகின்றன. கிருமி இரண்டாம் முறை நமது உடலில் நுழையுமானால், இந்த நினைவாக செல்கள் அதை அடையாளம் கண்டு உரிய ஆன்டிபாடிகளை விரைவாக உறபத்தி செய்து எளிதாக அழிக்கின்றன.
ஆன்டிபாடிகள் என்பவை ஒவ்வொரு நோய் கிருமிக்கும் என தனித்துவமாக உருவாக்கப்படும். ஒரு நோய் கிருமிக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடி வேறொரு நோய்கிருமிக்கு எதிராக செயல்படாது. எனவே தான் ஒரு நோய்கிருமியின் பரவலை கண்டறிய ஆன்டிபாடி சோதனைகள் செய்யப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட ஆன்டிபாடி நம் இரத்தத்தில் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட நோய் கிருமித் தொற்று நமக்கு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது தனித்துவமானது என்பதால் அக்குறிப்பிட்ட நோய் கிருமி தொற்று உண்டானால் மட்டுமே இரத்தத்தில் அந்த ஆன்டிபாடி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், COVID-19 உறுதியாகி அதிலிருந்து மீண்டு வந்த ஒரு நபர் அந்த கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறாரா என்பது இதுவரை சரியான பதிலில்லாத கேள்வியாக உள்ளது.
SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி உருவாகிறது என்பது விலங்குகளில் செய்யப்பட்ட சில ஆய்வு முடிவுகள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன என்றாலும், இரண்டாம் முறை தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதே சமயம் மிதமான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று எர்ப்படவர்களின் இரத்தத்தில் கண்டறியப்பட இயலாத அளவிலேயே ஆன்டிபாடிகள் உருவாகி இருந்தன.
மேலும் சாதாரண சளியை உருவாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் இரத்தத்தில் உருவாகியிருந்த ஆன்டிபாடிகள் ஆறு மாதத்திற்குள்ளாக 50% சதவிகித அளவுக்கும் அதிகமாக குறைந்திருந்தன.
புதிய ஆய்வு
கரோலின்ஸ்கா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக, ஸ்வீடனில் 200 க்கும் மேற்பட்ட லேசான / அறிகுறியற்ற அல்லது கடுமையான பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளை ஆய்வு செய்தனர்.
ஆன்டிபாடிகள் இல்லாத நிலையில் கூட அனைத்து குணமாகிக் கொண்டிருந்த நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் வலுவான T-செல் எனப்படும் ஒருவகை நோயெதிர்ப்பு செல்களின் மூலம் செயல்படுத்தப்படும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் உருவாகியிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், நோய் தொற்றுக்கு நேரிட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 30 சதவிகித ஆரோக்கியமான, மே மாதத்தின் மத்தியில் இரத்த தானம் செய்தவர்களிலும் கூட தொற்றுக்கு எதிரான T-செல் செயல்பாடுகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. அதேசமயம் கடுமையான பாதிப்பு இருந்தவர்களில் அதிக வலுவான செயல்பாடுகளும், மிதமான வாதிப்பு கொண்டவர்களில் குறைவான T-செல் செயல்பாடுகளும் காணப்பட்டது.
சுவாரஸ்யமான நிகழ்வாக, இதற்கு முன்பு, மஞ்சள் காய்ச்சல் போன்ற சில நோய்களில், தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு இதைபோன்றதொரு T-செல் மூலம் செயல்படுத்தப்படும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் கண்டறியப்பட்டிருந்தது.
இங்கு நாம் முக்கியமாக அறிய வேண்டியது, நமது நோயெதிர்ப்பு மண்டலம் B – செல்கள் மூலம் ஆன்டிபாடிகளை உருவாக்குவது மட்டுமின்றி, T-செல்களைத் தூண்டியும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளைச் செய்யும் என்பதாகும். இரண்டுமே தொற்றுக்கு ஏற்றவாறு நமது நோயெதிர்ப்பு மண்டலம் கடைப்பிடிக்கும் அல்லது வெளிப்படுத்தும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளே!!
முந்தைய 2003- இல் ஏற்பட்ட SARS – சார்ஸ் வைரஸ் பரவலுக்கு பிறகு, நோயாளிகளில் வைரஸ்களுக்கு எதிரான தனித்துவமான T-செல்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டன.
ஆன்டிபாடிகள் இல்லாத நிலையில், இந்த T-செல்கள் COVID-19- இல் இருந்து மீண்டு வந்தவர்களை இரண்டாம் சுற்று கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்குமா என இன்னும் முடிவாகக் கண்டறிய முடியவில்லை. இருந்தாலும், 2008 இல் பரவிய MERS மற்றும் 2003 இல் பரவிய SARS வைரஸ்களில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகள் ஆன்டிபாடிகள் இல்லாத நிலையிலும், இந்த வைரஸ்களுக்கு எதிரான தனித்துவ T-செல்கள் இரண்டாம் சுற்று வைரஸ் தொற்றுக்கு எதிராக உண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதையே காட்டுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழில்: லயா