சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 4 நாட்க்ளுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யலாம் என எச்சரித்துளது.

இன்று வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம், புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதனால் அடுத்து வரும் 4 நாட்களுக்கு (இன்று முதல் 17-ந் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,

“விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (புதன்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது”

என்று எச்சரித்துள்ளார்.