டெல்லி

நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்தியக்குழு கேரளாவுக்கு சென்றுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

இதனால், சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான். அவனது நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது.

நேற்று அக்ல் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். எனவே அவனது கிராமத்தில் மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 2018 ஆம் வருடம் கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா தொற்றின் தாக்கம் இருந்தது. மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அது தலைதூக்கியுள்ளது.

மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியதால் மத்திய சுகாதார அமைச்சகம் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து ஒரு குழு கேரளாவிற்கு சென்றுள்ளது.