டில்லி
மத்திய அரசிடம் அஞ்சல் துறை கட்டமைப்புக்களின் சொத்துக்கள் குறித்த விவரம் இல்லை என மத்திய இணை அமைச்சர் தேவிச்ங் ஜெசிங்பாய் சவுகான் கூறி உள்ளார்.
திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வியில், “தற்போது அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கல் எண்ணிக்கை மற்றும் அந்த துறையின் சொத்துக்களின் விவரம் என்ன? நாடெங்கும் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்களை பல்வேறு துறையின் அரசு திட்டங்களில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?” என கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய தகவல் துறை இணை அமைச்சர் தேவ்சிங் ஜெசிங்பாய் சவுகான் அளித்த பதிலில், “தற்போது அஞ்சல் நிலையங்கள் அஞ்சல்/பார்சல், சேமிப்பு வங்கி மற்றும் காப்பீடு சேவைகளுக்குக் கூடுதலாக பல்வேறு மக்களை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. தவிரப் பிற துறைகள் தொடர்பான மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.
இதில் குறிப்பாக ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் வசதிகள், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தபால் நிலையங்களை அணுகலாம். அஞ்சலகங்களில் அமைக்கப்பட்டுள்ள “பொது சேவை மையங்கள்”, டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள், ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் போன்றவற்றின் மூலம் வீட்டுக்கு வீடு வங்கிச் சேவைகள் என பல்வேறு துறை சார்ந்த சேவைகளைத் தபால் துறையினர் செய்து வருகின்றனர்.
நாடெங்கும் உள்ள அஞ்சல் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து தொன்னூறு ஆகும். இவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 16,875 பேர் பணியாற்றி வருகின்றார். மத்திய அரசு அஞ்சல் துறைக்குச் சொந்தமான கட்டமைப்புகளின் சொத்து மதிப்பு தொடர்பாகத் தரவுகள் எதுவும் பராமரிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.