டெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
58,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் நிறுவனம் ஏர் இந்தியா. எனவே அந்த நிறுவனத்தை மீட்கக மத்திய அரசு தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை.
ஏர் இந்தியாவின் பெருமளவு பங்குகளை தனியாரிடம் விற்று, நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வாங்க யாரும் வர வில்லை. அதன் பிறகு, 100 சதவீதம் பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது.
இந் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் வகையில் மத்திய அரசு சில முக்கியமான, தைரியமான முடிவுகளை எடுக்க இருக்கிறது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: முந்தைய அனுபவங்களில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இம்முறை ஏர் இந்தியாவை விற்பதில் நிச்சயம் வெற்றி கிட்டும். ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதில் தைரியமான முடிவை எடுப்போம்.
இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு சொந்தமாக விமான நிலையங்களை தனியாருக்கு விற்பதில், மத்திய அரசு வேகமாக களம் இறங்கியிருக்கிறது. 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டம் கைவசம் உள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வரும் காலங்களில் நிச்சயம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமோ அதைத் தான் முன்னெடுப்போம். பாதகமான அம்சங்களும் செயல்படுத்தப்பட மாட்டாது என்றார்.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழுவில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையேற்றார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவெடுத்தது.
பெரும் கடனில் இருந்ததால், அது நிகழவில்லை. பிறகு, ஏர் இந்தியாவின் கடன் தொகை அதிகரித்ததால், 29,000 கோடியை ஊழியர்கள் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக அளித்தது, குறிப்பிடத்தக்கது.