புதுடெல்லி:
டந்த அக்டோபர் 1-ஆம் தேதி அனைத்து முதன்மை தலைமை ஆணையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  சமீபத்தில் மத்திய நேரடி வருமான வரி வாரியத்தின் அதிகாரிகள் சிலர் வருமான வரித்துறை விதி 1964- கீழ்வரும் விதிமுறைகள் சிலவற்றை மீறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் இட மாற்றத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும், அரசியல் அல்லது பிற வெளிப்புற செல்வாக்கை கொண்டுவர முயற்சித்தது தெரியவந்துள்ளது, அதிகாரிகள் இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி இதுபோன்ற நடவடிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும், மேற்கூறிய விதிகளை மனதில் வைத்து அரசியல் அல்லது வேறு எந்த செல்வாக்கையும் அணுகுவதை தவிர்ப்பது மிகவும் அவசியம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் மத்திய நேரடி வரி வாரியம், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய கலந்தாலோசித்து வருகிறது.

இந்நிலையில் அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை தொடர்பு கொண்டதால் இவ்வாறான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: பெரும்பாலான மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள் மும்பை அல்லது டெல்லியில் பதவி வகித்த விரும்புகின்றனர், இதனால் இவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை நாடி செல்கின்றனர், இது எங்கள் விதிகளையும் மீறுவதாகும்.

மேலும் மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின் கீழ் எந்த ஒரு அதிகாரியும், விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு எதிராக முதல் முறையாக எச்சரிக்கை அளிக்கப்படும், அந்த எச்சரிக்கை சுற்றறிக்கை தான் இப்போது வெளிவந்துள்ளது. இதேபோன்று எச்சரிக்கை சுற்றறிக்கை கடந்த 2017-ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் மத்திய வருமான வரித்துறை வாரியஅதிகாரிகள் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.