சென்னை: காவிரி நீர் பிரச்சினையில், காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுமீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வருகிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, தனது வெற்றிக்கு பணியாற்றிய திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டு வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது  அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை உத்தரவிட வலியுறுத்தி தமிழக அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூட்டப்பட்டு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக மாநில அரசு, அவ்வப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என மறுத்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22,23,24ஆம் தேதிகளில் நடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் விநாடிக்கு 5ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27ஆம் தேதி வரை திறக்கக கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆஜராக உள்ளனர்.

முன்னதாக தமிழகத்திற்கு 12,500 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.