சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
26
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வேட்டி, சேலை, பணம் மற்றும் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை, கரும்பு என பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை திமுக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. ஆனால், இந்த பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்த கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் பல பொருட்கள் தரமற்ற நிலையில் காணப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு தொடர்பாக தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க கூடிய பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவரது மனுவில், தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், அந்த நிறுவனங்கள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதற்கு மாற்றாக அவற்றை தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இ
இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக்கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விசாரணையின்போது தமிழகஅரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதனால் என்ன வழங்கப்படுகிறது, எப்படி வழங்கப்படுகிறது என்பதை முன் கூட்டியே தெரிவிக்க இயலாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த தகவலை, பதில் மனுவாக. தமிழக கூட்டுறவுத்துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.