மரக்காணம்:

மரக்காணம் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த கார் விபத்தில் புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஜானகிராமன் (வயது 78). முன்னாள் திமுக அமைப்பாளரான இவர், உடல் நலக் குறைவு காரணமாக, முக்கிய கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வதோடு,  வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலில் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியிலிருந்து, தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள ஆலத்தூருக்கு காரில் சென்றார்.

கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக, மரக்காணம் கட்டையன் தெரு பகுதியில் மாலை 3.30 மணியளவில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென எதிரே வந்தது.   அதன் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய கார், சாலையோரமிருந்த மண் சுவரில் மோதி நின்றது.

விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் காரில் இருந்த ஜானகிராமன், அவரது உதவியாளர்கள் சபரி(36), சிவராஜ்(29), கார் ஓட்டுநர் ராஜி(30) ஆகியோரை மீட்டு அவசர ஊர்தி மூலம் புதுச்சேரி காலாப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜானகிராமன் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்றனர்.

ஜானகிராமன் உள்ளிட்டோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.