திருவனந்தபுரம்: தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயனின் குற்றச்சாட்டை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

கேரளாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அமலாக்கத் துறையினர் தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே மத்திய அமலாக்கத்துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளார். இந் நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த விசாரணையானது தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே கடந்தாண்டு மார்ச் முதல் நடந்து வருகிறது என்றும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.