டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை கடைபிடிப்பதுதான் உரிமையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தியா மதசார்பற்ற நாடு என அரசியலமைப்பின் முகப்பில் உள்ளது. தனிநபருக்கு , தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, ஆனால் அவர் அந்த உரிமையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட சீருடையைக் கொண்ட பள்ளி வரை எடுத்துச் செல்ல முடியுமா? என உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிசாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு, மாநில அரசின் உத்தரவை அமல்படுத்தலாம் என உத்தரவிட்டதுடன், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறியது. இந்த கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஹிஜாப் மற்றும் துப்பட்டா ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதி குப்தா ” நீங்கள் துப்பட்டாவையும், ஹிஜாபையும் ஒன்று என்று கூறுவது தவறு. துப்பட்டா தோள்களை மறைக்கும்” என்றும் ஹிஜாப் அப்படியில்லையே என்று கூறினார்.
இதற்கு பதில்கூறிய மனுதாரர் வழக்கறிஞர், மூத்தவர்களுக்கு முன்பு பெண்கள் தங்கள் மரியாதையை வெளிப்படுத்த துப்பட்டாவால் தலையை மூடுவார்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் கூறிய நீதிபதி குப்தா “ பஞ்சாபில் இது ஒரு கலாச்சார வழிமுறை இல்லை. குருத்துவாருக்கு வழிபட செல்லும்போது பெண்கள் துப்பட்டாவை, தலையில் போட்டுக்கொள்வார்கள்” என்று குறுக்கிட்டார்.
இந்த வழக்கில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் ராஜிவ் தேவன் கூறுகையில் “ ஹிஜாப்பை பயன்படுத்துவது, ஒரு முக்கியமான மத ரீதியான வெளிப்பாடு என்று சட்டத்தில் கூறவில்லையே “ என்று விளக்கினார்.
அப்போது, நீதிபதி குப்தா குறுக்கிட்டு “ஹிஜாப் அணிவது முக்கியமான மத ரீதியான வெளிப்பாடா என்பது முக்கியமில்லை. ஆனால் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் இது சரியாக இருக்குமா என்றுதான் கேட்க வேண்டும். சட்டத்தில் இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் உள்ளது. கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை கடைபிடிப்பதுதான் உரிமையா? என்று கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் தேவன், நீதிபதிகள் குங்குமம் வைத்து கொண்டு வருகிறார்கள் என்றும் சீனியர் நீதிபதி இடம்பெறும் புகைபடத்தில் அவர் தலையில் தலைபாகையுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் கூறிய நீதிபதி, தலைபாகை என்பது அரச மரியாதை அல்லது அக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட வந்த சிறப்பு அந்தஸ்து. இதை மத ரீதியான வழிமுறை என்று கூறயிலாது என்று நீதிபதிகள் கூறினர்.
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஹிஜாப் தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று குறிப்பிடப்படவில்லை என்றும். எல்லா அரசு கல்வி நிறுவனங்களுக்கும், சீருடை கட்டாயம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 11 இதைத்தான் கூறுகிறது என விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.