டெல்லி: 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே 52% இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய பாஜக அரசு மசோதா கொண்டுவந்தது. அதை உச்சநீதிமன்றம் அனுமதித்த 50% இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந் நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், 50% மேல் இட ஒதுக்கீடு பின்பற்றலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் வரும் 15ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசியல் சாசன அமர்வின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.