டெல்லி: நாடு முழுவதும் ரூ.27 ஆயிரம் கோடியில் 14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்துக்கும், ரெயில்வே நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உள்பட 14ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள், ‘பிரதமர்-ஸ்ரீ’ பள்ளிகளாக (பிரதமர்-எழுச்சி இந்தியாவுக்கான பள்ளிகள்) உருவெடுக்க தரம் உயர்த்தப்படும். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மேலும், இந்த திட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகள் இதில் சேர்க்கப்படும். இதற்கான மொத்த செலவு 5 ஆண்டுகளுக்கு ரூ.27 ஆயிரத்து 360 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18 ஆயிரத்து 128 கோடி. இந்த திட்டத்தால் 1 கோடியே 87 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள்.
மேலும், ரெயில்வே நிலத்தை ‘பிரதமரின் கதிசக்தி’ திட்டத்துக்காக நீண்டகால குத்தகைக்கு விடும் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போதைய 5ஆண்டுகளுக்கு பதிலாக 35ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்த நிலங்களில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கேரள மாநிலம் கொச்சியில் 2-ம்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 11 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,957 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.