டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமான BYD இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே மூன்று இடங்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இடங்களில் ஏதாவது ஒன்றில் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட இருந்த இந்த ஆலையை கொண்டு வர தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.

ஆனால், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலையளிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.

மேலும், இந்த செய்தியை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தயக்கம் காட்டுவதாகவும், அண்டை மாநிலங்கள் அள்ளிக்கொண்டு செல்வதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு சென்றிருப்பதாக வெளியான தகவலுக்கு BYD நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ரூ.2,800 கோடி செலவில் உதிரிபாகங்களை இணைத்து மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆலையை BYD நிறுவனம் அமைத்திருக்கும் நிலையில் இந்த மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.