டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டடி, இன்று  முதல் நடவடிக்கையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (ஜூலை 22)   தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. மொத்தம்  19 அமர்வுகள் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு தெரிவித்து உள்ளார்.  முதல்நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை (23ந்தேதி)  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  7வது முறையாக  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அமர்வின் போது, ​​90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அறிக்கையின்படி, பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ள மசோதாக்களில், பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா அறிமுகம் செய்யப்படும். இது பேரிடர் மேலாண்மையில் பல்வேறு அமைப்புகளின் பங்கை தெளிவுபடுத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாரதிய வாயுயான் விதேயக், 2024, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கு வசதியாக 1934 ஆம் ஆண்டின் விமானச் சட்டத்தை மாற்ற முயல்கிறது. கூடுதலாக, அமர்வில் கொதிகலன்கள் மசோதா, காபி (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா மற்றும் ரப்பர் (விளம்பரம் மற்றும் மேம்பாடு) மசோதா ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதனிடயே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் நோக்கில், நேற்று ( 21ந்தேதி) மாலை  டெல்லியில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

நீட் முறைகேடு, கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உணவகங்களுக்கு உத்தரபிரதேச அரசு விதித்த உத்தரவு, யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா, தேர்வுத்தாள் கசிவு, ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் தீவிரவாக தாக்குதல்கள் உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு விருப்பம் தெரிவித்தாலும், அது விதிகளின்படி இருக்க வேண்டும் என்றார். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், பொதுத்துறை வங்கிகளில் 51 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளை மட்டுமே வைத்திருக்க விரும்பும் அரசின் எந்த நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். பட்ஜெட் அமர்வில் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை அரசாங்கம் முன்மொழிகிறது. இது PSB களில் அரசாங்கத்தின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.