மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2026–27 பட்ஜெட், பொதுமக்கள் நலனை புறக்கணித்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே முதன்மைப்படுத்துகிறது என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் “வளர்ச்சி” என்ற வார்த்தை மட்டுமே பெரிதாக பேசப்படுகிறதே தவிர, அதன் பயன் சாதாரண மக்களுக்கு எட்டவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டை அரசு “வளர்ச்சியின் சக்கரம்” என்று விளம்பரப்படுத்தியது. ஆனால் அந்த சக்கரம் முழுக்க பஞ்சர் நிலையில் இருந்தது என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்த ஆண்டும் அதே சக்கரத்தில் காற்று மட்டும் நிரப்பி ஓட்ட முயற்சி செய்யப்படுகிறதே தவிர, (பஞ்சரை சரிசெய்ய) அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனுக்கு மிகக் குறைந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது :

2025–26 ஆண்டிற்கான பட்ஜெட் ரூ. 50.65 லட்சம் கோடியாக இருந்தது.

அதில், சுகாதாரம். கல்வி, வீடு, வேலைவாய்ப்பு, குடிநீர், ஊட்டச்சத்து போன்ற முக்கியமான 12 நலத்திட்டங்களுக்கு மொத்த பட்ஜெட்டில் 0.44% மட்டுமே ஒதுக்கப்பட்டது.

அதுவும் முழுமையாக செலவிடப்படவில்லை. ரூ. 2.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதில் 81,350 கோடி ரூபாய் மட்டும் தான் செலவானது. இது மொத்த பட்ஜெட்டில் 0.16% தான்.

இதன் பொருள், நாட்டின் 140 கோடி மக்களை அரசு அவர்களுடைய வாழ்க்கை சிக்கல்களோடு தனியாக விட்டுவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு நிலை இன்னும் மோசம்

2026–27ல் பட்ஜெட் அளவு ரூ. 53.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு 2.12 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கணக்கில் எடுத்தால், உண்மையில் இது இன்னும் பெரிய வெட்டுக்குறைப்பு.

கடந்த காலத்தில் தேசிய ஆயுஷ்மான் மிஷன், பிரதமர் ஸ்ரீ, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன், பிரதமர் வீட்டுவசதி திட்டம் – நகர்ப்புறம், பிரதமர் வீட்டுவசதி திட்டம் – கிராமப்புறம், பிரதமர் வீட்டுவசதி திட்டம் – நகர்ப்புற 2.0, நகர்ப்புற சவால் நிதி, ஜல் ஜீவன் மிஷன், பிரதமர் கிராமின் சதக் யோஜனா, பிரதமர் பயிற்சித் திட்டம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் இந்தியா AI மிஷன் ஆகிய நலத் திட்டங்கள் செயல்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும் போது,

இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து 77,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அரசு திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தி, செலவு செய்யாததே அதன் திட்டமிட்ட கொள்கையாக உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

MNREGAவுக்கு முடிவா?

20 ஆண்டுகளாக கிராமப்புற இந்தியாவின் உயிர்நாடியாக இருந்த MNREGA, கோரோனா காலத்தில் தனது முக்கியத்துவத்தை நிரூபித்தது. ஆனால் இப்போது இந்தத் தேவை அடிப்படையிலான திட்டம் ரத்து செய்யப்பட்டு, ஒதுக்கீடு அடிப்படையிலான திட்டமான ‘கிராம்-ஜி’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

MNREGA – கிராம மக்களுக்கு நேரடி வேலை, வருமான பாதுகாப்பு அடங்கிய திட்டம்.

Gram-Ji : கார்ப்பரேட் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கிராமங்களை ஒருங்கிணைக்கும் ஒதுக்கீடு அடிப்படையிலான திட்டம்.

இதற்கான செலவிலும், மாநில அரசுகள் பெரிய பங்குத் தொகை செலுத்த வேண்டும். ஆனால் மாநிலங்களின் நிதி உரிமைகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டமும் முழுமையாக நடைமுறைக்கு வரும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

மத்திய–மாநில திட்டங்களில், நிதிக் கமிஷன் மானியங்களில் பெரிய அளவில் நிதியை குறைத்துள்ளது. அதே நேரத்தில், மாநிலங்கள் மத்திய திட்டங்களுக்கு 40% வரை பங்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநிலங்களின் வளர்ச்சியை முடக்கும் நடவடிக்கை என்றும் விமர்சனம் எழுகிறது.

பெரும் நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் காரணமாக அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை. வரி வருவாய் பெரும்பாலும் பெட்ரோல், டீசல் போன்றவற்றில் விதிக்கப்படும் மறைமுக வரிகளிலிருந்து வருகிறது. இதன் சுமை முழுவதும் சாதாரண மக்கள்மேல் தான் விழுகிறது.

நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது என்று அரசு பெருமை பேசுகிறது. ஆனால் அது – சுகாதாரம், கல்வி, சமூக நலன் போன்ற மக்களின் அடிப்படை நலத்திட்ட செலவுகளை குறைத்ததால்தான் சாத்தியமானது என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். வளர்ச்சியின் சக்கரத்தை பூட்டிவைத்தே இந்த இலக்கு அடையப்படுகிறது என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

கடந்த ஆண்டு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. அதனால் உள்நாட்டு சந்தை விரிவடையும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. சேமிப்புகள் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதற்கே பயன்படுத்தப்பட்டன. புதிய தொழில், புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை.

உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் – தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களில் நிரந்தர வேலை, ஒப்பந்த வேலை ஒழிப்பு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை, MNREGA-வில் அதிக வேலை, அதிக ஊதியம் ஆகியவை அவசியம்.

ஆனால் இவை எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. காரணம், இவை அனைத்தும் கார்ப்பரேட் நலன்களுக்கு எதிரானவை.

தனியார்மயம், விற்பனை, சலுகை நீக்கம், தொழிலாளர்–விவசாயி நலன் வெட்டு ஆகியவற்றை அதிகரிக்கும் பட்ஜெட்டாகவே இது உள்ளது.

பொதுமக்கள் நலத்தை விட, கார்ப்பரேட் லாபமே இந்த பட்ஜெட்டின் மையம் “வளர்ச்சி என்பது இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தான். அரசு பார்வையாளர் மட்டுமே” என்ற கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]