ஜெய்ப்பூர்:
பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார்.
அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்து ஒரு வகையான பாசிச மக்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர், இது ஒரு பெரிய ஆபத்து என்றும் விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் 135 வது நிறுவன நாளில் மாபெரும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. ‘இந்தியாவை காப்பாற்றுங்கள் – அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்துடன் “கொடி அணிவகுப்பு” அங்குள்ள ஷாஹீத் ஸ்மாரக்கிலிருந்து தொடங்கி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் பேரணி நிறைவடைந்தது.
அதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், பாஜக மீது கடுமையாக தாக்கிப்பேசினார்.
சுதந்திர இயக்கத்தின் போது பிரிட்டிஷாருக்கு இன்பார்களாக இருந்தவர்கள், காங்கிரஸின் மரபு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். கட்சியின் அரசியலமைப்பு “அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, ஜனநாயகத்தின் குரல் நாட்டில் மிதிக்கப்படுகிறது” என்றார்.
“எங்கள் மரபு வலுவானது, அது பெருமைகளால் நிரம்பியுள்ளது. முழு நாடும் அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று கூறியவர், நமது மரபு குறித்து பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்பதும், பண்டிட் நேருவின் மரபு பற்றி அவர் என்ன கூறுகிறார் என்பதும் அனைவரும் அறிவர், பண்டிட் நேருவின் மரபு தியாகம் மற்றும் நாட்டிற்காக சிறைக்குச் சென்றது குறித்து பேசியவர், “முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த நாட்டுக்காக தங்களது இன்னுயிரை இழந்து தியாகத்தை அடைந்தனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரியம் என்பது பெருமைக்குரியது. ஒட்டுமொத்த தேசமும் காங்கிரஸின் பாரம்பரியத்தையும் தியாகத்தையும் போற்றுகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் மரபு.
ஆனால், உங்கள் கட்சியின் சித்தாந்தம் கொண்டவர்கள் சுதந்திர போராட்டத்தின் போது பிரிட்ஷாருக்கு உளவாளியாக செயல்பட்டவர்கள் என்று விமர்சித்தவர், அவர்கள் இன்று காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது வெட்கக்கேடான விஷயம் ”என்று குற்றம் சாட்டினார்.
தற்போது நாட்டில் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது, ஜனநாயகம் கொல்லப்படுகிறது, “அனைத்து நிறுவனங்களும் பாழாகி வருகின்றன, நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ, இடி, வருமான வரித்துறை மீது அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் நாட்டில் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்பட முடியவில்லை…. அனைத்து முடிவுகளும் PMO இல் எடுக்கப்படுகின்றன, நாடு எங்கே போகிறது? ” என்று கேள்வி எழுப்பினார்.
“இன்று, பாஜகவினர், ஒரு வகையான பாசிச மக்கள் ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லை. இது ஒரு சிறிய அச்சுறுத்தல் அல்ல, இது எங்களுக்கு முன்னால் ஒரு பெரிய ஆபத்து” என்று தெரிவித்தவர், ‘சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக எங்கும் வெற்றி பெறவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். மீண்டும், காங்கிரஸின் கொள்கைகள், அதன் சித்தாந்தம், அதன் திட்டங்கள் இந்த நாட்டிற்கு பலம் கொடுக்கும், மேலும் நாட்டை அப்படியே வைத்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.