சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த இந்த இடத்தில் தொடங்கப்பட்ட இந்த மருந்து நிறுவனம் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது.
இதுகுறித்து அந்நிறுவன வாசலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருப்பதும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகார் அளிப்பதாவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் வெள்ள நீர் தொழிற்சாலைக்குள் புகுவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் இது நிறுவனத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தவிர, தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உற்பத்தி குறைந்துள்ளதால் நிறுவனத்தின் சென்னை யூனிட் நீண்ட காலமாக நிதி ரீதியாக லாபகரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டிடம் மிகவும் பழமையான நிலையில் உள்ளதால் இந்த தொழிற்சாலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி கிடைக்க பல்வேறு விதிமுறைகள் காரணமாக நீண்ட காலம் ஆகும் என்று அங்கு ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரும் பெங்களூரைச் சேர்ந்த பிரிகேட் நிறுவனம் இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
₹600 கோடி திட்ட மதிப்பில் மொத்தம் சுமார் 2.26 லட்சம் சதுர அடியில் 18 மாடிகளைக் கொண்ட 4 டவர்களில் 400 வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை அந்நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.