சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் டிசம்பர் 19ந்தேதிஅன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல் மற்றும் ராட்வீலர் ஆகிய இன நாய்களை வளர்க்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது, “சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், பெரும்பாலானவை பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களின் ஆக்ரோஷமான தன்மையால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பிட்புல், ராட்வீலர் நாய் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டியுள்ளது. அதன்படி, பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும் போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம்.
இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படு கிறது. உரிமம் இல்லாமல் இன்று முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
