70வது பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித் தேர்வில் (சிசிஇ) வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி பீகாரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அரசியல் கட்சியினரும் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை (ஜனவரி 6, 2025) போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 2ஆம் தேதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக, காந்தி மைதானத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்த கிஷோரை அந்த இடத்தை காலி செய்யுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியேற்றும் பணியின் போது, போலீசார் கிஷோரை அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று பிரஷாந்த் கிஷோர் கூறிவந்தார்.
இந்த நிலையில், இன்று காலை காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாக அந்த இடத்தில் இருந்து கைது செய்து அப்புறப்படுத்தினர்.
70வது பிபிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை மற்றும் மறு ஆய்வு, 2015ல் உறுதியளித்தபடி 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் பற்றிய விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் டிசம்பர் 29 அன்று பாட்னாவில் மாணவர்கள் மீது தடியடிக்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசு பணியிடங்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பணியிடங்கள் பீகார் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் குடியுரிமைக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அதேவேளையில், டிசம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்வில் 12000 பேர் தேர்வு எழுத திட்டமிடப்பட்டிருந்த BEC தேர்வு மையத்தில் முறைகேடு ஏற்பட்டதை அடுத்து அந்த மையத்தில் ஜனவரி 4ம் தேதி மறுதேர்வு வைக்கப்பட்டது. இதில் 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மறு தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.