வாரணாசி

டந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கூட்டத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடற்கூறு அறிக்கை இன்னும் அளிக்கப்படவில்லை

வாரணாசி நகரில் உள்ள பஜார்திகா பகுதியில் முகமது வகில் என்பவர் வசித்து வந்தார்.  அவருடைய இளைய மகனின் பெயர் முகமது சகீர் என்பதாகும்.  எட்டு வயதான சகீர் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று விளையாடச் செல்வதாகச் சொல்லி விட்டு தனது சைக்கிளில் சென்றுள்ளான்.   விரைவில் திரும்ப வேண்டும் எனக் கூறி அனுப்பிய அவன் தாய்க்கும் பாட்டிக்கும் அவன் திரும்பவே போவதில்லை என்பது அப்போது தெரியவில்லை.

தங்கள் வீட்டு வாசலில் சைக்கிளுடன் விளையாடிக் கொண்டிருந்த சகீர் அருகில் உள்ள பிரதான சாலைக்குத் தனியே சென்றுள்ளான்.   அங்கு நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அவன் அங்கு நின்றிருந்தான்.   கூட்டத்தினரைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால்  மக்கள் சிதறி ஓடினார்கள்.

அப்போது கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த சிறுவன் கீழே விழுந்து கூட்டத்தினரால் மிதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளான்.   பிரதான சாலையில் தடியடி எனக் கேள்விப்பட்ட சிறுவனின் பாட்டி ஷெனாஸ் அக்தர் அவனைத் தேடிக்கொண்டு சென்றுள்ளார்.  சிறுவனைக் காணாமல் கலக்கம் அடைந்த அவர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தார்.

சகீரின் தந்தை முகமது வகில் இரவு 9.30 மணிக்கு வந்ததும் வீட்டில் உள்ளோர் அவரிடம் நடந்ததைக் கூறவே அவர் உடனடியாக தேடத் தொடங்கி உள்ளார்.  அப்போது அங்கிருந்த ஒருவர் தனது மொபைலில் சிறுவனின்  படத்தைக் காட்டி அவன் மிதிபட்டதாக தெரிவித்துள்ளார்.  உடனடியாக அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ முகாமுக்குச் சென்று பார்ப்பதற்குள் சகீர் இறந்து விட்டான்.    அவனது உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்னும் பெற்றோருக்கு அளிக்கப்படவில்லை.

தனது மகனின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய அரசு ஊழியர்கள் வற்புறுத்தியதால் தாங்கள் அடக்கம் செய்து விட்டதாக வகில் தெரிவித்துள்ளார்.  அந்த மாவட்ட நீதிபதி கௌசல்ராஜ் சிங், “அவர்களுக்கு எதற்கு உடற்கூறு அறிக்கை தேவை?  நாங்கள் அந்த சிறுவன் கூட்டத்தில் மிதி பட்டு இறந்ததை ஒப்புக் கொண்டுள்ளோம்.  நிறையப் பேர் அந்த சிறுவன் கூட்டத்தில் இறப்பதைப் பார்த்துள்ளனர்.  இருந்தும் அறிக்கை எதற்காக? ” எனக் கேட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி உடற்கூறு சோதனை நடந்ததாக ஒப்புக் கொண்டுள்ள போதிலும் அந்த அறிக்கையைச் சிறுவனின் குடும்பத்தினருக்கு ஏன் தரவில்லை என்பதைக் கூற மறுத்து விட்டார்.  மாறாக அந்த பகுதியில் தேவையற்ற அமைதியின்மை உண்டாவதைத் தடுக்க சிறுவனின் உடலைப் புதைக்கும் பை கேட்டுக் கொனுட்ள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து விசாரிக்கச் சிறுவனின் தந்தை வகிலை அணுகிய போது அவர் பணிக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.   அவர் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்குத் துக்கம் அனுசரிக்கவும் நேரம் இருப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.