அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.
‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இதில் உதயநிதியின் மனைவி கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ், கலை இயக்குநர்களாக வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா, எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு ‘நெஞ்சுக்கு நீதி’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் மோஷன் போஸ்டரில் படத்தின் சின்ன சின்ன காட்சிகளுடன், ‘ஜாதி ஜாதி ஜாதி’ என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற சுய வரலாற்று நூல் மிகவும் பிரபலம். ஆறு பாகங்களாக இந்நூல் வெளியானது. தாத்தா எழுதிய புத்தகத்தின் தலைப்பையே தன் படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று (22.10.2021) சென்னைக்கு வருகை தந்த போனி கபூர், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில், ‘நெஞ்சுக்கு நீதி’ படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.