டில்லி:

மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக தனி நபர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மும்பை வக்கீல்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 19ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசுத், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து விசாரணை குழு அமைக்கும் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி லோயா ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்தே தனி நபர் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து தான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.