டில்லி:
கடந்த 27ந்தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளாவுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வடக்கு மும்பை தொகுதியில் ஊர்மிளா போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் இந்தி, தமிழ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஆர்வம் கொண்ட ஊர்மிளா கடந்த 27ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.‘
அப்போது, ஊர்மிளாவுக்கு மும்பை வடக்கு மக்களவை தொகுதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஊர்மிளாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது. அவர் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஷ்னிக் அறிவித்து உள்ளார்.