டெல்லி: “மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி” செய்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டமான 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  ஆட்சி தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற இண்டி கூட்டணியும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

இதற்கிடையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளின் அவதாரம் என்றும், மறு பிறவி என்றும், தன்னை  ‘தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று நினைப்பதாகவும்  அதாவது,  உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, குமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இன்று மாலை முதல் ஜுன் 1ந்தேதிவரை 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதுவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இத்ந நிலையில், பிரதமர், மோடியை விஷ்ணுவின் 11வதுஎ அவதாரமாக காட்ட பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்வதாக  காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் கே ஜெனாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்  சிறப்புரையாற்றயி  காங்கிரஸ் தலைவர்,  மல்லிகார்ஜூன கார்கே “இந்த தேர்தல் வருங்கால சந்ததியினருக்கானது. மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். அரசியலமைப்பும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் ஆபத்தில் சிக்கி விடும். பிரதமர் மோடியை விஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக மாற்ற பா.ஜ.க தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இதை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதம் ரூ.8,500 வழங்கப்படும். மேலும், குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.250ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.