பாரபாங்கி, உத்திரப் பிரதேசம்
பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களை மதம் மாற்றுவோம் என பாஜக தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சா கூறி உள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் பாரபாங்கியை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சா. இவர் தனது மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் லக்னோ பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த போது பல மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
ரஞ்சித் பகதூர் மாணவப் பரு வத்தில் இருந்தே இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். பாரபாங்கி நகராட்சி தலைவர் பதவியை வகித்துள்ள ரஞ்சித் பகதூரின் மனைவி சசி ஸ்ரீவத்சாவும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார்.
சமீபத்தில் ஒரு தேர்தல் பரப்புரையில் ரஞ்சித் பகதூர்,”பிரதமர் மோடி இஸ்லாமியர்களின் அடையாளங்களை மாற்ற பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு சீனாவில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யபட்டு இங்குள்ள இஸ்லாமியர்களின் தாடி மழிக்கப்பட்டு அவர்கள் இந்துக்களாக மாற்றப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் பகதூரின் இந்த உரை உத்திரப் பிரதேச மாநில மக்களிடையே குறிப்பாக இஸ்லாமியர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் சமயத்தில் இவர் இவ்வாறு பேசியது பாஜக தலைவர்களிடையேயும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. ஆனால் ரஞ்சித் பகதூர் தமது பேச்சுக்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க மறுத்துள்ளார்.