டில்லி
பாஜக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் தண்டிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காநிதி குற்றம் சாட்டி உள்ளார்.
நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கொரோனா பொது முடக்கத்தால் அது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பல படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அதே வேளையில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்கள் போன்ற பல கல்வி நிலையங்களில் ஏராளமான காலி இடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ள நிலையும் இங்கு உள்ளது.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உண்மையான பட்டங்களை வைத்திருப்பதால் படித்த இளைஞர்களைக் குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அரசு தண்டிப்பதாகத் தெரிகிறது” எனப் பதிவு இட்டுள்ளார்.
அத்துடன் தனது பதிவில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பட்டியலை இணைத்து ஐஐஎம் களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இடங்கள் காலியாக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
ஏற்கனவே பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் போலி பட்டங்களைக் கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி உண்மையான பட்டம் எனக் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.