பாட்னா: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக,  பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட பள்கிள மீண்டும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 8ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசி வருகிறது. தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் நீடித்த நிலையில், இடையில் பெய்த கோடை மழை காரணமாக வெப்பம் குறைந்தது. இதனால், தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் வெப்ப அலை அதிகரித்துள்ளது. அதுபோல,  பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.  இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பீகாரின் கோடை விடுமுறை முடிந்த கடந்த திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து,  செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.  இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து,  வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ் குமார், வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புல், பீகாரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் மே 30 முதல் ஜூன் 8 வரை மூடப்படும்.  நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, பீகார் அரசு அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.