முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் பிறந்தாளான இன்று, ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15–ந் தேதி அன்று பிறந்தார். இன்று அவரது 89–வது பிறந்த நாளாகும்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் கனவு நாயகன் என தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களால் அன்போடு அறியப்பட்டவர், முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
அணுவிஞ்ஞானியும், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் இறந்த பிறகு, அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுதும் அரசும், பல்வேறு அமைப்புகளும் கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள், இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இன்று எழுச்சி தினமாக கொண்டாட்ப்படுகிறது.
அப்துல்கலாமின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஐதராபாத்தில் ஏவுகணை வளாகத்துக்கு காலம் பெயர் இன்று சூட்டப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் உருவம் பொறித்த நினைவு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
1997ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2002ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார்.,
சிறப்பாக பணியாற்றிய இவர் ‘மக்கள் ஜனாதிபதி’ என்று நாடு முழுவதும் அழைக்கப்பட்டார். மாணவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர், தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான மாணவர்களை நேரடியாக சந்தித்து, சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரை யாடினார். 2015 ஜூலை 27ல் அவர் மரணிக்கும் போது கூட, மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டி ருந்தார். 2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் மறைந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.