டெல்லி: செய்தி தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பார்க் (Broadcast Audience Research Council (BARC) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், டைம்ஸ்நவ், ரிபப்ளிக் டிவி போன்ற ஊடகங்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கும் பதியப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தி ஊடகங்களுக்கு வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) அறிவித்து உள்ளது.
ஊட்கங்கள் வணிக நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்களை பெறவும், வருமானத்தை அதிகரிக்கவும் டிஆர்பி ரேட்டிங் எனப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்பான தரவு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாப பல ஊடகங்கள் போலியாக, டிஆர்பி ரேட்டிங்களை அதிகரிக்கும் வகையில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற நிகழ்வு மகாராஷ்டிரா மாநிலத்தில், சுஷாந்த்சிங் தற்கொலை செய்தியை வைத்து பெரிதுபடுத்தப்பட்டது. விளம்பர வருவாயைப் பெருக்கும் வகையில், போலியாக டிஆர்பியை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செய்தி ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
செட் டாப் பாக்ஸ்களை பொருத்தும்போது, அதில் அதிகமானோர் ஒரு சேனலைப் பார்ப்பது போல அமைப்பது, ஏழை குடும்பத்தினர், ஒரு குறிப்பிட்ட சேனலை நாள் முழுவதும் டிவியில் வைத்திருக்க மாதந்தோறும் பணம் கொடுப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து குறிப்பிட்ட சில செய்தி தொலைக்காட்சிகள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலியாக டிஆர்பியை உயர்த்திக் காண்பித்து, அதிக விளம்பரத்தைப் பெற்று வருவாயை ஈட்டியதாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தி ஊடகங்களுக்கு வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) முடிவு செய்துள்ளது.
செய்தி ஊடகங்களின் பார்வையாளர்களை கணக்கிடும் தற்போதைய முறையை மறுபரிசீலனை செய்து, அதற்கான வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கை 12 வாரங்களுக்கு (3 மாதம்) நிறுத்த முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.