பன்னிரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி பெங்களூரில் வாடகைக்கு வீடு தர மறுத்ததாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கூகுள், ஆரக்கிள், ஐபிஎம், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை பலநூறு ஐ.டி. கம்பெனிகள் நிறைந்திருக்கும் பெங்களூரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு வரை சுமார் பதினைந்து லட்சம் புலம் பெயர்ந்தோர் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெங்களூரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட இவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

தளர்வுகளைத் தொடர்ந்து மீண்டும் காஸ்மோபொலிட்டன் சிட்டி என்று கூறப்படும் பெங்களூரை நோக்கி படையெடுக்கும் இந்த ஊழியர்கள் பெங்களூரு நகரில் வீடு பிடிப்பதற்கு படும் சிரமத்தை தங்கள் சமூக வலைதளபக்கங்களில் விவரித்து வருகின்றனர்.

வாடகைக்கு வீடு பார்க்க வருபவர்களிடம் அவர்களின் சமூக வலைதள பயனர் தகவல் முதற்கொண்டு பல்வேறு விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது.

அப்படி ஒருவர் வீடு பார்க்க சென்றபோது அவரது லின்கட் இன் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்ட உரிமையாளர் அவரது 12ம் வகுப்பு மதிப்பெண் விவரங்களையும் கேட்டுள்ளார்.

12 ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறி வீடு தர மறுத்ததாக வாட்ஸப் செய்தியை சமூக வலைதளத்தில் புரிந்துள்ளார்.

பெங்களூரில் வாடகையை மட்டுமே வைத்து பிழைத்து வரும் வீட்டு உரிமையாளர்கள் பலரும் இதுபோன்று தேவையில்லாத பல்வேறு காரணங்களைக் கூறி வாடகைக்கு வருபவர்களை நிராகரிப்பதாக சமூக வலைதளத்தில் கூறப்படுகிறது.