டோக்கியோ
தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர்.
எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரக வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை. நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம்.
வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள்.
இந்நிலையில் ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். மற்ற வாழைப்பழங்களை விட இந்த மோங்கீ வாழைப்பழம் மிகவும் சுவையானது. இதை ‘உறைய வைத்து வளர்த்தல்’ என்ற முறையில் வளர்க்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அனைவராலும் இதை வாங்க முடியாது. ஏனெனில் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க இயலவில்லை. ஒரு வாரத்திற்கு வெறும் பத்து வாழைப்பழங்களையே விளைவிக்க முடிகிறது.
இந்த மோங்கீ வாழைப்பழம் அண்ணாச்சிபழ சுவையை கொண்டுள்ளது. பழத்தின் தோல் மிகவும் மெலிதாக இருப்பதால் பழத்தோடு சேர்த்து தோலை எளிதாக சாப்பிட முடிகிறது. இது உடல் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தோன்றும் உணர்வுகளுக்கு காரணமாக இருப்பதாக ஜப்பானில் கூறப்படுகிறது.