பகுசராய்
அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதை சுலோகங்களைக் கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து இந்து மத நூல்களைப் பள்ளிகளில் கற்பிப்பது பற்றிக் கூறி வருகின்றனர். இது பல நேரங்களில் நாட்டில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஆயினும் பாஜகவினர் தொடர்ந்து இத்தகைய கருத்துக்களைக் கூறி வந்த வண்ணம் உள்ளனர். அவ்வகையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.
நேற்று பீகார் மாநிலம் பகுசராய் பகுதியில் நடந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உரையாற்றினார். அப்போது அவர், “நாம் நமது குழந்தைகளை கிறித்துவப் பள்ளிகளுக்கு அனுப்பி விடுகிறோம். அந்த குழந்தைகள் ஐஐடியில் படித்து பொறியாளர்களாகி வெளிநாடு சென்று மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பிக்கின்றனர். இதற்குக் காரணம் நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளைச் சொல்லிக் கொடுக்காததே ஆகும்.
அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதை சுலோகங்களை அவசியம் கற்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நமது பெருமைகளை உணர்வார்கள். தற்போதுள்ள வீடுகளில் நூற்றில் மூன்று வீடுகளில் மட்டுமே ராமாயணம், கீதை போன்ற புத்தகங்கள் உள்ளன. அவ்வாறு இருக்க நாம் குழந்தைகளைக் குற்றம் சொல்ல முடியாது” என உரையாற்றி உள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.