வெலிங்டன்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இந்நிலையில், களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு தீர்மானத்துடன் களமிறங்கினர்.
துவக்க வீரர் மேத்யூ வேட் 5 ரன்களுக்கு வெளியேறிவிட, கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் ஜோஷ் பிலிப்பி அதிரடியாக ஆடினர். பின்ச் 44 பந்துகளில் 69 ரன்களும், பிலிப்பி 27 பந்துகளில் 43 ரன்களும் அடித்தனர்.
இதன்பிறகு, கிளென் மேக்ஸ்வெல் ஆடியதுதான் பெரிய ஆட்டம். 31 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களை விளாசினார். முடிவில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களில் 208 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா.
பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, துவக்க வீரர் கப்தில் 43 ரன்கள் அடிக்க, கான்வே 38 ரன்களை அடித்தார். வேறு யாரும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை.
அந்த அணி 17.1 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்டன் ஆகர், 4 ஓவர்கள் வீசி, 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். மெரிடித் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த அணியில் மொத்தம் 7 வீரர்கள் பந்து வீசினர்.
தற்போதைய நிலையில், டி-20 தொடர் 2-1 என்ற கணக்கில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன.