அமராவதி
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் என 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து பதியப்பட்டுள்ளது. அந்த புகாரில், கடந்த 2011ம் ஆண்டு, கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த நிலையில், தன் மீது பொய் வழக்குப் போடப்பட்டு, தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும், முன்னாள் முதல்வர்ர் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாதமே கிருஷ்ண ராஜூ தனது புகாரை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்ததாகவும், சட்ட ரீதியாக ஆலோசனைப் பெறப்பட்டு, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.