காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது  பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூலில் உள்ள ஒரு மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக  ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் இச்சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  காபூலில் உள்ள , உமர் போதை ஒழிப்பு சிகிச்சை மையத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.  இதில் 400 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  “நம்பிக்கையின் மருத்துவமனை, கனவுகளின் ஒரு இறைச்சிக் கூடமாக மாறிவிட்டது,” என்று ஹம்துல்லா ஃபித்ரத் பதிவிட்டுள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷாரப் ஜைதி, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்குப் பதிலடியாக பிப்ரவரி மாத இறுதியில் ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடங்கியபோது இந்த மோதல் ஆரம்பமானது. மேலும், இது போர் நிறுத்த உடன்படிக்கையையும் குலைத்தன. முன்னதாக போர் என்ற பெயரில் ஏராளமான வீரர்கள், பொதுமக்கள், சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் என பலர் கொல்லப்பட்டத்தை இந்த கத்தார் போர் உடன்படிக்கையை நிறுத்தி வைத்திருந்தது.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பிற்கும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைத் தொடர்ந்து இலக்கு வைக்கும் தடைசெய்யப்பட்ட பலோச் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மட்டுமல்ல. இந்தப் பிராந்தியத்தில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் மீண்டும் தழைத்தோங்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த மோதல் சர்வதேச சமூகத்தை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானுக்கும், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடித்தால், அது ஒரு பாதுகாப்பு இடைவெளியை உருவாக்கும். அந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீவிரவாதக் குழுக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]