சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும், ஏப்ரலில் வாக்குப்பதிவு, மே மாதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி 4முனை போட்டி நிலவும் சூழல் உருவாகி உள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தவாக , கொங்கு கட்சி என சில கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. இந்த கூட்டணி தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி வருகிறது.
அதிமுக கூட்டணியில், இருந்த பாஜக, தேமுதிக உள்பட கட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், இந்த முறை மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணையும் என தெரிகிறது. ஆனால், தேமுதிக எங்கு செல்லப்போகிறது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இதனால், கூட்டணி பேரங்கள் திரைமறைவாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், புதிதாக கட்சி தொடங்கி அரசியல் களத்திற்குள் புகுந்துள்ள நடிகர் விஜயின் தவெகவும் அரசியல் களத்தை அதகளப்படுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என ஆசை வார்த்தை கூறி, மற்ற கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை இழுக்க முயற்சித்து வருகிறது. அதுபோல பல பெருந்தலைகளை தனது பக்கம் இழுக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என கோரிக்களை எழத்தொடங்கி உள்ளன. இதற்கு திமுக தலைமை உறுதியான பதில் தெரிவிக்காத நிலையில். காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை கூட்டணி தொடர்பாக சந்தித்து பேசியபோது, அதிக தொகுதிகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதாவது, கடந்த 2021 தேர்தலில் 25 சீட்களை பெற்று 18ல் வெற்றி பெற்றனர். இம்முறை 45 சீட்கள் வரை உயர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியில் பங்கு என்ற எதிர்பார்ப்பை போட்டு பார்க்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அளவிற்கு திமுக தலைமை இறங்கி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜயுடன் ராகுல்காந்தியின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது அரசியல் புயலை கிளப்பி உள்ளது. அதாவது, திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியானது தவெக உடன் கைகோர்க்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை அதிர வைத்து வருகின்றன.
இந்த நிலையில், செல்வபெருந்தகை “2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளே இன்னும் முடிவு செய்யாத நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்பமனுக்களை பெறலாம் என அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]