டில்லி,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு  அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதில் தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை இன்றுமுதல் தனது விசாரணையை தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  பி.ஏ.ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான கமிஷனின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து  பி.ஏ.ஜோசப் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசு இதுபோன்ற விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், அதனை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி முடிவெடுக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைப்பதற்கு முன்பு சட்டசபையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் சட்டப்படி செல்லுபடியாகாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.