ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை நிறுவனங்கள், போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கு முன்பு, ஒன்றரை மடங்கு கூடுதலாக வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கூடுதலாக, பயணிகளை ஏற்றிச் செல்லும் தூரம் மற்றும் எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட மூன்று கிலோமீட்டர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

பல்வேறு மாடல் வாகனங்களுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டண விகிதமே, செயலிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வேண்டிய அடிப்படை கட்டண விகிதமாகும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓலா, உபர், ராபிடோ உள்ளிட்ட செயலிகளின் பைக் சேவைகள் அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது புதன்கிழமை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள்-2025’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த காரணமும் இல்லாமல் ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்தில் 10%, ₹100க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம். இந்த விதி பயணிகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.