சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை அபர்ணா நாயர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
அதற்கு ஒருவர் ஆபாசமான கருத்தைப் பதிவிட்டார். இந்தக் கருத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்த அபர்ணா, அந்த நபரைக் கடுமையாகச் சாடி, காவல்துறையிலும் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
https://www.instagram.com/p/CBfuHwADkMK/
“பொதுவெளியில் என்னைப் பற்றி ஆபாசமாகக் கருத்திட்டதாக அஜித் குமார் என்பவர் மீது நான் புகார் அளித்திருந்தேன். சைபர் செல் விசாரணை நடத்தியது. இன்று அவர்கள் என்னை அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார்கள். நான் சரியான நேரத்தில் சென்றடைந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் வருவதற்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகப் போனது. அவர் வந்தபோது ஏன் அப்படிக் கருத்துப் பதிவிட்டார் என்றுதான் நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்கு அவர், பல அரசியல் கருத்துகளுக்கு நடுவில் அதுவும் ஒரு கருத்து என்று சாதாரணமாகச் சொன்னார். அவரது குடும்பம் மற்றும் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு நான் எனது புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். அந்த நபர், இனி இப்படித் தவறு செய்ய மாட்டேன் என்றும், எந்தப் பெண்ணையும் மரியாதைக் குறைவாக நடத்தமாட்டேன் என்றும் எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்ய உதவிய ஊடக நண்பருக்கு நன்றி. காவல்துறை கூடுதல் ஆணையர் மனோஜ் ஆப்ரஹாம், சைபர் பிரிவு எஸ்.ஐ. மணிகண்டன், ஜிபின் கோபினாத் மற்றும் திருவனந்தபுரத்தின் பெண்கள் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.
பி.கு: அஜித் குமாரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது, அவர் அப்பாவி என்று கவலைப்பட்டவர்கள் இனி நிம்மதியாக வாழலாம். குற்றம் செய்தது அவரே”.
இவ்வாறு அபர்ணா நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் திருவனந்தபுரம் சைபர் செல் கட்டிடத்தின் முகப்பை புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார் அபர்ணா. மேலும் இனி இதுபோன்ற விஷயங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் ஹேஷ்டேகில் குறிப்பிட்டுள்ளார்.