அமராவதி
பாஜகவுக்கு எதிரணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து வரும் மே மாதம் 21 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ஒரு அணியை அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட பிப்ரவரி மாதத்தில் இருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த குறைந்த பட்ச பொதுத் திட்டம் குறித்து டில்லியில் விவாதிக்கப்பட்ட்டது. அப்போது அனைவரும் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக திரண்டு தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு பிறகு எதிர்க்கட்சிகள் பல சந்திப்புக்கள் நிகழ்த்தின. ஆயினும் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் இருந்தன. அதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் பாஜகவின் கூட்டணியிலும் பிளவுகள் ஏற்பட்டன.
பிரதமர் மோடி, ”எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் உடைகளை அணிந்துக் கொண்டு உள்ளனர். அநேகமாக மே 23 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அந்த உடைகளை கிழித்து எறிவார்கள்” என எதிர்க்கட்சிகள் குறித்து கிண்டலாக கூறினார்.
இந்நிலையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம், “நாடெங்கும் உள்ள பல தொகுதிகளிலும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை செய்தியாளர்கள் அறிவார்கள். தவறு நடக்க முடியாத படி இந்த இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை.
பிரதமர் மோடி கூறியது போல் அல்லாமல் எதிர்க்கட்சிகளும் ஒரு சில திட்டங்கள் வைத்துள்ள்ன. வரும் மே மாதம் 21 ஆம் தேதி பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகள் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பிரதமர் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். என தெரிவித்தார்.