சென்னை:
தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறாக, கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ம.தி.மு.க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 இடங்களில் 14 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்குகிறது.

இதுமட்டுமின்றி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.