கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்பட சில தலைவர்கள், தவெக, திமுக என மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்‘ கூறிய செங்கோட்டையனை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையில், நீக்கிய நிலையில், அவர் தவெகவில் ஐக்கியமானார். அதுபோல ஓபிஎஸ்-ம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதுபோல அண்ணாமலையும் டெல்லி சென்று மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார்.
இந்த நிலையில், கோவையில் நடைபெறற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒபிஎஸ், அண்ணாமலை கலந்துகொண்டதுடன், இருவரும் சிறிது நேரம் தனியாக உரையாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப் பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் t இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் அவரை அழைத்து பேசுவதும், தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.