மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி அளித்ததை எதிர்த்து இன்றுமுதல் (பிப்ரவரி 14ந்தேதி) காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த, சமுக சேவகர் அன்னா ஹசாரே, தனது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா மாநில கூட்டணிஅரசு, மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் தாக்கரே அரசின் முடிவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மாநில அரசின் முடிவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியதுடன், மாநில அரசை எதிர்த்து இன்று முதல் (பிப்ரவரி 14ந்தேதி) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது தனது உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அவரது கிராமமான ராலேகான் சிந்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசியபோது, “குடிமக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக அமைச்சரவையின் முடிவை இப்போது மாநில அரசு முன் வைக்க முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் என கிராம மக்களிடம் கூறினேன். இதனால் பிப்ரவரி14ஆம் தேதி நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன்” என அறிவித்துள்ளார்.