அமராவதி:
ஆந்திர மாநிலத்துக்கு நிர்வாக வசதிக்காக 3 தலைநகர் அமைக்கப்படுவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்த நிலையில், அதற்கான மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்ன தாக, இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், கடந்த தெலுங்குதேசம் ஆட்சியின்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதியை அறிவித்தார். குண்டூர் மாவட்டம் கிருஷ்ணா நதிக்கரையில் வெளிநாட்டு வங்கி உதவியுடன் எழில்கொஞ்சும் பிரமாண்டமான தலைநகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தெலுங்குதேசம் படுதோல்வி அடைந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார்.
இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் பல்வேறு திட்டங்களை ரத்து செய்யும், மாற்றம் செய்தும் வரும் ஜெகன், தலைநகர் அமராவதிக்கு பதில் விசாகப் பட்டினத்துக்கு மாற்றப்படுவதாகவும், நிர்வாக வசதிக்காக மாநிலத்தில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அரசு நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், சட்டமன்றத்துக்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங் களை உருவாக்கப்படும் என்றும், தலைநகரை மாற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிப்பதற்கு 2 குழுக் களை அவர் அமைத்தார். இந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை முதல்வரிடம் அளித்துவிட்டன. இந்த அறிக்கைகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் அறிக்கை அளித்துள்ளது.
ஜெகன் மோகன்ரெட்டியின் அறிவிப்புக்கு தெலுங்குதேசம் கட்சி உள்பட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். கடந்த 5 வாரங்களாக அமராவதியில் உள்ள 29 கிராமங்களிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மாநில அரசின் முடிவுக்கு எதிரான இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டமன்ற சிறப்புக்கூட்டம் இன்று தொடங்கி உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், தலைநகர் அமராவதியை மாற்றி 3 புதிய தலைநகரங்கள் உருவாக்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முன்னதாக இன்று காலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் மாநில அமைச்சசரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில தலைநகர் மாற்றம் உள்பட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுத்துள்ளனர்.
175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என தெரிகிறது.
தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.