குண்டூர்: தான் கலந்துகொண்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் குறித்து ஒரு அழகான ஒப்பீட்டை அளித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

மேலும், தனது தந்தையைவிட மக்களுக்கு சிறப்பாக சேவைசெய்ய தான் முயல்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ரமலானுக்கு முந்தைய இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “இந்த இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அழகான கதையையே எழுதுகிறார். அதன் ஒரு உதாரணத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் 67 பேர் சட்டசபைக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதுதவிர, நாடாளுமன்றத்திற்கு 9 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

ஆனால், அந்த 67பேரில் 23 பேரையும், 9 பேரில் 3 பேரையும் சந்திரபாபு நாயுடு கடந்த 5 ஆண்டுகாலத்தில் தன் கட்சிக்கு இழுத்துக்கொண்டார்.

ஆனால், தற்போது ரமலான் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் பாருங்கள். சந்திரபாபு நாயுடுவின் கட்சி மிகச்சரியாக 23 சட்டசபை இடங்களை மட்டுமே வென்றிருப்பதோடு, 3 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கடவுள் எழுதும் அழகான கதைக்கு இதுவும் ஒரு உதாரணம்” என்றார்.