சென்னை:

திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து பாமக விரைவில் வெளியேறும் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணியின் அகங்காரமான பேச்சும் எதிரொலித்து வருகிறது.

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ந்தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பாஜக அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குஎதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே சட்டத்துக்கு மாநிலங்களவையில் அன்புமணி ஆதரவாக வாக்களித்த நிலையில், இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ள கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆரம்ப காலத்தில் வன்னியர் சங்கத்தை தொடங்கிய ராமதாஸ் “தேர்தல் பாதை, திருடர் பாதை” என் வீர வசனம் பேசியும், தனது குடும்பத்தினர் யாரும் அரசியல் பதவிக்கு வர மாட்டார்கள் என்று கூறி, வன்னியஇன மக்களிடையே பிரபலமானார். பின்னர், வன்னியர் சங்கம்  பாட்டாளி மக்கள் கட்சியாக மாறி அரசியலுக்குள் கால் பதித்தது. இதற்கு பல்வேறு காரணங்களை ராமதாஸ் கூறினாலும், அவரது பதவி வெறி வெளிச்சத்துக்கு வந்தது.

1989 தேர்தலில், தனித்து தேர்தலை சந்த்த பாமக,  ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத முடியாததால்,  1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பன்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக ஆனார்.   தொடர்ந்து  1996 சட்டப் பேரவைத் தேர்தலில், வாழப்பாடி ராமமூர்த்தி நடத்திவந்த திவாரி காங்கிரஸோடு போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு  கொண்டிருந்த பாமக, 1998 மக்களவை தேர்தலில், ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதில் 4 இடங்கள் வெற்றிபெற்ற நிலையில், மத்திய அமைச்சரவையிலும் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கிடைத்தது.

இதன்பிறகு அதிகாரப்போதை ஏறிய பாமக, பின்னர் நடைபெற்ற தேர்தலிலும், திமுக உடன்  கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு பண பலன்களையும், பதவி சுகத்தையும் அனுபவித்து வந்தது. அப்போது அதிமுகவையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தது. ஆனால், 2001 சட்டமன்றத் தேர்தலில், எந்தவித கூச்சமுமின்றி ஜெயலலிதாவுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு, அன்புச்சகோதரி ஜெயலலிதா என்று கூறி, தானும் சராசரி அரசியல்வாதிதான் என்று கூறி பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பின்னர்  2004 பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் திமுக அணிக்கு தாவியவர்,  2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனால், ராமதாசின் பச்சோந்தி வேடத்தை புரிந்துகொண்ட ஜெயலலிதா, தேர்தலில் பாமகவுக்கு எதிராகவே அதிமுகவினரை வேலை செய்ய பணித்தார். இதனால் பாமக போட்டியிட்ட அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.

அதையடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, “மாற்றம் முன்னேற்றம் என்று நீங்கள் தனித்து களம் கண்ட பாமக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாத அளவுக்கு தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுகமீதும், செயலலிதாவும் கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடத் தொடங்கினார் ராமதாஸ், அதிமுக அரசை அடிமை அரசு என்றும்  டயர் நக்கி என்று அருவறுப்பான வார்த்தைகளால், மிக மட்டமாக அர்ச்சித்த ராமதாஸ், தனது மகனை அமைச்சராக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், பாராளுமன்ற தேர்தலின்போது, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

பாமகவின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், எந்தவித கூச்சமுமின்றி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து மண்ணை கவ்வினார். இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாடு படி விக்கிரவாண்டி உள்பட எந்தவொரு தொகுதியிலும் பாமக போட்டியிடாத நிலை ஏற்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுகவும் சில இடங்களை கைப்பற்றி, தனது பெரும்பான்மையை தக்க வைத்துக்கொண்டது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவை அதிமுக மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை கடந்த 1ந்ததி பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி கடுமையாக விமர்சித்தார்.  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாமகவை மதிக்கவில்லை என்றும், இடைத்தேர்தலில் அதிமுக கேட்டுக்கொண்டதால் அப்போது எம்.எல்.ஏ.சீட்களை விட்டுக்கொடுதோம்,  ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பாமகவை கண்டுகொள்ளவில்லை என்றும், தங்களுக்கு  உரிய மரியாதை தரவில்லை என்று குமுறிய நிலையில்,  பாமகவின் கொள்கையை மாற்றி கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனா, ஏன் கூட்டணிக்குள் போனோம்னு யோசிக்க வைத்துவிட்டார்கள் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் இல்லை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம் குறித்து விளக்கம் அளித்த ராமதாஸ்,  கூட்டணி தர்மத்துக்காக ராஜ்யசபாவில் சட்டத்துக்கு  ஆதரித்தோம் என்று கூறி, அதிமுக, பாஜக கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதை பகிரங்கப்படுத்தினார்.

அதிமுகவின் தயவால், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகிக்கும் அன்புமணி, அதிமுகவை சீண்டியது, அதிமுக தலைமைக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிசிஏ சட்டத்துக்கு எதிராக பாமக தீர்மானம் போட்டிருப்பது பாஜக தலைமைக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திமுக அதிமுக வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சூளுரைத்த ராமதாஸ்,  எடப்பாடி அரசை பினாமி அரசு என்று கூறியதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது தனது மகனுக்கு பதவி பெறும் ஆசையில்அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியது சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுக கூட்டணியை மீண்டும் வசைபாடி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கு தேர்தல் கட்சித்தாவும் ராமதாஸ், அடுத்த சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நோக்கில், அதிமுகவை மீண்டும் வசைபாட தொடங்கி உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாமகவின் அதிமுக விரோத பேச்சுக்கள்,  அதிமுக பாமக இடையே  புகைச்சலை  அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்குள் விரைவில் மோதல் ஏற்பட்டு, கூட்டணி உடையும் என்று  அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்….