டில்லி
மறைந்த பாஜகவின் அமைச்சரான அருண் ஜெட்லியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி முதல்முறை பிரதமரான போது நிதி அமைச்சராக அருண்ஜெட்லி பணி புரிந்தார். அவர் உடல்நிலை சீர் கெட்டதால் அவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு இன்று மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “அருண் ஜெட்லியின் மறைவு பாஜகவினருக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.
நான் தனிப்பட்ட முறையில் அருண் ஜெட்லியை அறிவேன். அவர் இனிமையாகப் பழகக் கூடியவர் ஆவார். எங்களுடைய அரசியல் கசப்புணர்வு அருண் ஜெட்லியுடனான தனிப்பட்ட நட்பினால் இனிமையாக மாறியது. அவர் கல்லூரி நாட்களில் இருந்தே ஒரு நல்ல மாணவர், நல்ல பேச்சாளர், சுறுசுறுப்பானவர், நல்ல பேச்சாளர் மற்றும் நல்ல தலைவர் ஆவார்” எனக் கூறி உள்ளார்.