ஜம்மு காஷ்மீர்: இமயமலையில் உள்ள பனி லிங்கமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் அங்கு வருகை தருவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் நடப்பாண்டு, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் http://www.jammu.com/shri-amarnath-yatra/registration-form.php இயதளத்தில்  தொடங்கியுள்ளது.

அமர்நாத் ஆலய இணைய தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அமர்நாத் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு அமர்நாத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் ரம்பன் மாவட்டத்தில் மூவாயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளதாக அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.